Friday 2 February 2018

மனிதனா? மிருகமா?

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்,

             இப்பிரபஞ்சத்திலேயே ஆகச்சிறந்த படைப்பு, என தன்னைத்தானே கருதிக்கொள்ளும் ஒரு பூலோக ஜீவராசி ஒன்று உண்டு. நாகரீகத்தின் உச்சத்தில் வாழ்பவன் என்கின்ற பெயரிலும், இவ்வுலகம் பிறந்தது எனக்காக என்கிற ம(த/ட)த்தனமான நம்பிக்கையிலும், தான் சார்ந்து வாழும் சுற்றுச்சூழல் சமூகத்தை மெல்ல மெல்ல சீர்கெடுக்கும் ஒருவித கிருமி. உண்மையில் இது உருவானதிலிருந்து இது வாழும் நீலநிறக் கருவறை, மாசுபடிந்து, அதன் பனிக்குடம் உடைந்து, கடல்மட்டம் சீரற்று உயர வழிசெய்தது. அதனுடன் இரட்டையராய் இணைந்து பிறந்த பல்லுயிர் சகோதரர்களை வாழவும், வளரவும் விடாமல், தன்னை மட்டுமே தற்காத்துக்கொள்ளத் துடிக்கும், தன்னலமிக்க ஒட்டுண்ணிபோல், பல உயிரினங்களைக் காவு வாங்கி, இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.


             தற்போது நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலிருந்து சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் மொழி பேசும் தொல்லினம் ஒன்று இருந்தது; தற்போதும் அது புவியெங்கும் பரவிக்கிடந்தாலும், முற்காலத்திய தமிழினத்தின் திறனை ஒப்பிடும்போது, தற்காலத்திய தமிழினத்திற்கு மூளை எனும் உறுப்பின் சில பகுதிகள் செயலிழந்துவிட்டதுபோல் தெரிகிறது. உலக நாகரீகங்களே தொட நடுங்கிய பல சாம்ராஜ்யங்களைக் கொண்டது அவ்வினம் வாழ்ந்த பூமியான பாரதம். உலகத்தின் சிறந்த அறிஞர்கள் என அறியப்பட்ட பலரும் பாதம் பதிக்க விரும்பிய மண் யாவும், இவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களே. இவர்களை நேராக மோதி வீழ்த்த இயலாத பல அரசர்களும் வஞ்சகமாய் எவ்வாறு வீழ்த்தலாம் எனத் தங்கள் சகாக்களோடு கூட்டம் போடும்போதெல்லாம், வியந்து வெளிப்படுத்திய வார்த்தைகளுள் முக்கியமானது, “எப்படி இவ்வளவு பெரிய உயிரினத்தைக் கட்டுப்படுத்தி, அதை ஏவுகின்றனர்?” என்பதே.

             ஆம், உலகமே அதுவரைக் கண்டிராத, ராட்சசக் கரிய மிருகங்களான யானைகளை, போர்வீரர்கள் போல், படைகளில் அணிவகுக்கச் செய்து, எதிரிகளைக் குலைநடுங்கச் செய்த கூட்டம், இன்று, அதே வல்லமைமிக்க வாரணங்களை, தோரணங்கள் அழகூட்டும் திருவிழாக்களிலும், வீதிகளிலும் பிச்சையெடுக்க விட்டு வயிற்றை நிரப்பிக்கொண்டு திரிகின்றது. அங்குசத்திற்குக் கட்டுப்பட்ட அவ்வேழம் அறியவில்லை, அதன் மூதாதையர் அதன் மண்ணில் கால்வைக்க முற்பட்ட அன்னியர் படையின் முதுகுகளை பூமியின் மறுபுறம் போகும்வரை மிதித்ததை. ஐந்தறிவு கொண்ட விலங்கினமாக நம்பப்படும், புத்திக்கூர்மையுள்ள அவ்விலங்கு, தன் சிறுவயதில் கட்டுண்ட மெல்லிய சங்கிலியில் (அதன் பலத்தோடு ஒப்பிடும்போது), தன்னைச் சிறையிட அனுமதித்திருக்கிறது, இன்றளவும். அவ்விலங்கின் பெருமைகளை அது அறியாததுபோல், ‘ஆறறிவு பெற்ற சமூகவிலங்கு நான்’, என மார்தட்டும் மனித ஜீவராசிகளும், அவற்றின் முன்னோரது பெருமைகளை உணர்ந்திலர். மதம்பிடித்த வேழத்தையும் மத்தகத்தில் அடித்து மயக்கமுறச் செய்யும் துணிவும் திறனும் பெற்ற முன்னோரின் சந்ததியினர், அவ்விலங்கின் இருப்பிடம் தேடி, வசிப்பிடம் அமைத்தனர். விளைவு, அது அதன் பாதைகளில் மனிதர்களைக் கண்டது. செய்தியோ, 'மனிதர் வசிக்கும் இடங்களில் யானைகள் நடமாட்டம்' என்று! அறிவுடையோர் சிந்திப்பர்.

             ஐந்தறிவு விலங்கினம் என யானைகளை மனித உயிரினம் ஒதுக்கினாலும், அவை சுற்றுசூழலின் தன்மைகளையும், இயற்கையின் இயல்புகளையும் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெறாமலேயே அறிந்துணர்ந்திருக்கின்றன. உதாரணமாக, அவை உணவுக்காக தினமும் ஒரு குறிப்பிட்ட திசைநோக்கியே பயணிக்கின்றன. முதல்நாள் மேய்ந்த ஓரிடத்தில், மறுநாள் அவை ஒரு புல்லைக்கூடப் பிடுங்குவதில்லை. இந்த வழிமுறை தாவரங்கள் தடையின்றி வளரவும், யானைகள் பசியாறவும் எவ்விதத் தடையுமின்றித் துணைபுரிகின்றன. யார் கற்றுக்கொடுத்திருப்பார்கள் இந்த இயற்கை சார்ந்த அறிவை, அதுவும், தன்னைக் கண்ணாடியில் அடையாளம் கண்டுகொள்ளும் அந்த ஐந்தறிவு விலங்கினங்களுக்கு...?! தனக்குப் பிறந்த குழந்தைகளையும், தன்னை ஈன்ற பெற்றோர்களையும் அனாதை என்று கூறி ஆசிரமங்களில் சேர்க்கும் மனித இனம், தொலைந்து போன அல்லது பெற்றோரை இழந்த யானைக்குட்டிகளை மற்றோர் யானைக்கூட்டம், தனது கூட்டத்தில் பரிவோடு சேர்த்துக்கொள்கின்றன என்பதை அறியுமா? அதன் முறம்போன்ற காதுமடல்களின் பின்புறம் தனது கால் கட்டைவிரலால் அழுத்தியும், அங்குசத்தால் குத்தியும், அதற்கு மட்டுமே உபதேசித்த சங்கேத வார்த்தைகளைக் கூறி அதனைக் கட்டுப்படுத்தும் எஜமானன், தன்னை மறந்து தனது காலருகில் தூங்கினாலும், அது இடறி, அப்பாகன் தலை சிதறுண்டதில்லை. எங்கிருந்து கற்றது அந்நன்றியை...?!; நன்றிகெட்ட இம்மனித உயிரினங்களோடு இத்தனைகாலம் அவை வாழ்ந்தபோதும்.








              சில மனித உயிரினங்கள் இதை வாசிக்கும்போது மனதினுள் கூச்சலிடலாம். “எத்தனை பேரை மதம்கொண்ட யானை மிதித்திருக்கிறது தெரியுமா?” என்று. அவ்வாறு குமுறும் சிலவற்றிடம் எனது சில கேள்விகள்:
  • கான்க்ரீட் காடுகளுக்குள், உச்சாணிக்கொம்பின் ஓர் மூலையில் முடங்கிக்கொண்டு, உலகில் கொட்டிக்கிடக்கும் அழகு எதனையும் ரசித்து அனுபவிக்காது, எங்கோ பிறந்து, எவனுக்காகவோ உழைத்து, கடமைக்காக வாழ்ந்து, பலர்போல் தானும் மடியும் குரங்கினத்தின் எச்சமே, சற்றேனும் சிந்தித்துப்பார், அவற்றில் ஏதேனும் ஒன்று உனது குகைக்கு, நீ செல்வதுபோல மின்தூக்கி வழியே வந்து உன்னை மிதித்ததா என்று.
  • போர் வீரனுக்கு பிச்சைக்காரன் வேடமிட்டு, அந்த பிச்சையில் வயிறு வளர்க்கும் உம்மினத்திற்கு என்ன தகுதியுள்ளது, அவ்விலங்கினங்களை சிறையிடவும் சூறையாடவும்.
  • அவற்றின் வாலின் மயிர்பிடுங்கி மோதிரங்கள் செய்கின்ற நீயெங்கு உணரப்போகிறாய், உன்முன்னோர் அவைகொண்டு அவனிவென்று சேர்த்துவைத்தப் புகழை?
  • கடவுளாக வணங்கிடும் கூட்டம்கூட அதன் இயல்பறிந்து அதற்கான வாழ்விடங்களை அவைகளுக்கு விட்டுக்கொடுத்தபாடில்லை.
  • இவ்வுலகிலுள்ள அனைத்தும் மனிதனுக்காகக் கடவுளால் படைக்கப்பட்டது எனும் நம்பும் சாராரும், அவற்றை அடிமைப்படுத்தவும், அவற்றைக் கீழே தள்ளி, அதன்மீது தன் காலை வைத்து, தான் அதனினும் உயர்ந்தவன் என்று பெருமை பீற்றிக்கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது?
             சந்தனமரங்களையும், யானைத் தந்தங்களையும் வெட்டி விற்றவனை, ‘வனக்காவலன்’ என்று பிதற்றும் ஒருகூட்டம் மறுபுறம். மூடர்களே, ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள். முற்காலத் தமிழர்கள் “பரணி” என்று ஒரு பாடல் பாடுவர். போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனின் புகழைக் கூறும்படி அப்பாடல் வரிகள் அமையும். (உதாரணம், கலிங்கத்துப்பரணி.) எந்தவொரு முற்காலத் தமிழனும் 999 யானைகளைக் கொன்றுவிட்டோம், இன்னும் ஒன்றைக் கொன்றால் பரணி பாடப்பட்டுவிடும் என நினைத்து, ஏதேனும் ஒரு யானையைக் கொன்றதில்லை. ஆயிரம் வாரணங்களையும் தாண்டி எத்தனை வதங்களை ஒரு வீரன் நிறைவேற்றினானோ தெரியாது. எத்தனை வீரர்கள் மேலுமொரு யானையைக் கொல்லும் போர் மூளாமல் தங்கள் புகழ் வெளி உலகத்திற்குத் தெரியாமல், வரலாற்றின் இருளில் மூழ்கினார்களோ தெரியாது.


             ஆனால், அவ்வாறு பரணி பாடப்பட்ட வீரர்கள் யாவரும், தாங்கள் அதுபோன்ற பரணிகளால் புகழ்பெற வேண்டுமென்றோ, வயிற்றுப் பிழைப்புக்காகவோ, தனது பராக்கிரமத்தைக் காட்டவோ, ஒரு யானையையும் துன்புறுத்தியதில்லை. அவர்கள் தன்னைக் கொல்லவரும், போர் யானைகளை மட்டுமே, அதுவும் நேருக்கு-நேர் எதிர்கொண்டே வென்றனர். அதிலும், அதைத் துன்புறுத்த முனைந்ததில்லை; வதைக்காமல் வதம் செய்தனர். கருவுற்ற யானைகளைக் கருவறுத்ததில்லை. யானைக்குட்டிகளைத் துன்புறுத்தியதில்லை. யானைகள் என்றில்லை, போரில் ஈடுபடுத்தப்படும் எந்தவொரு உயிரினத்தையும், தங்கள் உயிருக்குப் பாதகமில்லாத பட்சத்தில் எந்தவொரு சுத்த வீரனும் கொன்றது கிடையாது. (யானைகளின் தும்பிக்கைகளை வெட்டவும், குழிபறித்து, அதனை சருகுகளால் மூடி, உட்புறம், வேல், சூலாயுதம் போன்றவற்றை நட்டுவைத்து, அதில் யானையைத் தந்திரமாகத் தள்ளியும், அது அத்தனைபெரிய உடம்போடும் வேகமாக ஓடிவரும்போது அதன் மென்மையான பாதங்களைத் துன்புறுத்தும்வண்ணம் முட்கதைகளை பாதைகளில் வீசியும், அதன் பின் அவற்றை வென்ற குறுக்குபுத்திக்காரன் தைமூரின், பின்னணியில்கூட அவனது வீரமன்றி சூழ்ச்சியே மறைந்திருந்தது. இன்றோ, பார்போற்றும் புகழ்பெற்ற பாரத்ததின் புதல்வர்கள், தங்கள் இடம் ஆக்கிரமிக்கப்பட்ட சூழ்ச்சிகளை அறியாத அப்பாவி ஜீவன்களின் மீது பட்டாசுகளை வெடித்து அதனைத் துரத்துகிறார்கள். உண்மையில் இவர்கள்தான் பரிசுத்தமான வந்தேறிகள். ஆனால் இதை உணராமல், 'யானை கடையினுள் புகுந்தது, சிறுத்தை வீட்டினுள் புகுந்தது' என்று பிதற்றுவது மகா முட்டாள்தனம்.


தீயால் தாக்கப்பெற்று,  பயத்தில் அலறியடித்து ஓடும் குட்டியானை; செய்வதறியாது திகைத்து ஓடும் தாய் யானை

             தாங்கள் பாதுகாவலராக இருந்த மன்னர் வேட்டைக்குச் செல்லும்போது, அவர்மீது பாய்ந்த புலியின் வாலைப்பிடித்துத் தலைக்குமேல் சுழற்றி வீசி எறிந்தார் “பெரிய மருது”. ஆனால், நமது பாரதத்தில், புலிக்கூண்டினுள் தவறி ஒருவன் அன்று விழுந்தபோது, தற்காப்பிற்கு என்ன செய்யவேண்டும் என்பதைக்கூட மனித இனம் அதன் சந்ததிகளுக்கு அவற்றின் கல்விக்கூடங்களின் எந்தவொரு மூலையிலும் கற்பிக்கவில்லை. (பொதுவாக, இத்தகைய சூழலில் நாம் சிக்க நேரிட்டால், பயப்படாமல் எழுந்துநின்று எதிர்நிற்கும் மிருகத்தை நோக்கி பலம்கொண்ட மட்டும் கோபமாகக் கத்தவேண்டும். அது உளவியல் ரீதியாக நமக்கு பலத்தையும், அதற்கு பயத்தையும் தரும். மேலும், கீழே உட்காராமல் எழுந்து நின்று, இரு கைகளையும் மேல்நோக்கியோ, இருபுறமும் நீட்டியோ நிற்கவேண்டும். இது அவ்விலங்கினும் நாம் பெரியவன் போலவும், நாம் அது வேட்டையாடத்தகுந்த இரைபோல சிறிய விலங்கினம் அல்ல என்பதுபோன்ற மாயத்தோற்றத்தையும் ஏற்படுத்தும்.) அவனது கழுத்தைப்பிடித்து இழுத்துச்சென்ற புலியைநோக்கி கையில்கிடைத்ததை வேலிக்குப் பின்னிருந்து எடுத்துவீசிய வீரர்கள், விழுந்த அம்மனிதனின் மருத்துவ ஆய்வறிக்கையில், “அப்புலி அம்மனிதனைக் கொல்லவேண்டுமென்ற நோக்கத்தில் அவனது பின்கழுத்தைக் கவ்வவில்லை; சுற்றியிருந்த மட மனிதர்கள் அவனுக்கு நன்மை செய்வதாகக் கருதி, கண்டதையும் எடுத்து எறிவதைக் கண்ட புலி, தன் குட்டிகளைத் தாக்குதலிலிருந்து தற்காப்பதுபோல, அம்மனிதனைக் கவ்வி இழுத்துச் சென்றுள்ளது. ஆனால், புலிக்குட்டியின் தோல் வலிமையை மட்டுமே அறிந்த அப்புலியால், மனிதத் தோலின் தடிமனை யூகிக்க முடியாததன் விளைவே, அவனது கழுத்தில், ஆழப் பதிந்த புலியின் பல்தடம்” என குறிப்பிடப்பட்டிருந்தபோது தீமையேதும் செய்திடாத ஞானிபோல மௌனம் சாதித்தது, இம்மேதகு மனித இனம்.


           தனது இனம் பிரிந்ததாகக் கருத்தப்படும் வேர்-இனமான குரங்குகளையும் கூட, நாகரீகத்தில் கொடிகட்டிப்பறப்பதாக நம்பும் மனித இனம், சங்கிலியால் பிணைத்து வித்தை காட்டிப் பிழைக்கிறது. இவ்வாறு மிருகவதைகளை ஒருபுறம் நிகழ அனுமதித்த அதே இனத்தின் சில குழுக்கள், மறுபுறம் அவற்றை கடவுளாகவும், கடவுளரின் வாகனங்களாகவும் தொழுகிறது; மற்றோர் குழு, அது தனக்கு கடவுளரால் படைக்கப்பட்ட இரையாக நினைத்து வெறிகொண்டுத் துரத்துகிறது. அதிலும் தனக்கு லாபமான உயிர்களையே இம்மனித இனம் விட்டுவைக்கவும், இனத்தைப் பெருக்க அனுமதிக்கவும் செய்கிறது. உதாரணத்திற்கு, முட்டையிலிருந்து வெளிவரும் கோழிக்குஞ்சு பெட்டையாக இருக்கும் பட்சத்தில், அது பின்னாளில் முட்டையிட்டு லாபமீட்டும் எனவுணர்ந்து, அதை உயிரோடு இருக்க அனுமதிப்பர்; அதுவே சேவலாக இருக்கும் பட்சத்தில், அதனை உயிரோடு ஒரு ராட்சஸ அரவையில் போட்டு அரைத்துக் கூழாக்கி, அதைவிற்றுக் காசாக்குவர். அது ஆணாய்ப் பிறந்ததைத் தவிர வேறெந்த பிழையும் செய்யவில்லை. பெண்ணியம் பேசும் மாதர்சங்கங்கள் இதுகுறித்து எங்கும் மூச்சுவிடாது.



வித்தைகாட்ட விலங்கிடப்படும் விலங்குகள்


ஆணாய்ப்பிறந்த பாவத்திற்காக அரைத்துக் கொல்லப்படும் சேவற்குஞ்சுகள்

           சில ஆண்டுகளுக்கு முன் மரங்களடர்ந்த பகுதியிலோ, தோட்டங்களின் அருகிலோ வசிக்க வாய்ப்பு கிடைத்த புண்ணியவான்கள் அன்றைய சூழலின் மழைக்காலத்தை சற்று நினைத்துப்பாருங்கள். மண்வாசனை, மழைசொட்டும் சத்தம், கூரைகளில் வழிந்தோடும் மழைநீரின் சத்தம், மழை ஓய்ந்தபின் கத்தும் தவளைகளின் சத்தம் என பல சத்தங்களை கேட்ட நமது காதுகள் இன்று செவிடாகிப்போனதோ என நினைக்கும்வண்ணம் அச்சத்தங்களை இழந்து நிற்கிறோம். எங்கே சென்றன அத்தவளைகள். பாறையின் உள்வாழும் தேரைகள் எங்கே சென்றன. மழைக்காலங்களில் நமது காதோரம் ஃபிடில் வாசித்தப் பெண் கொசுக்களைப் பிடித்துத் தின்ற அந்நண்பர்கள் எங்கே?
  • அறுத்துப் பார்த்து ஆய்வு செய்கிறேன் பேர்வழி என்று கொத்துக் கொத்தாகக் கொண்டு செல்லப்பட்டு, ஆய்வகங்களில் கொல்லப்பட்டன.
  • கொசுமருந்து அடிக்கிறேன் பேர்வழி என்று நமது வீட்டைச் சுற்றி வந்த சுந்தரா ட்ராவல்ஸின் சைலென்சர், சாக்கடையில் குடியிருந்த கொசுக்குடும்பங்களின் வீடுகளைக் காலிசெய்து நமது வீடுகளுக்குள் விருந்தாளிகளாக அனுப்பி வைத்தது.
  • தேங்கிய நீரில் தெளிக்கப்பட்ட மருந்துகள் கொசுப்புழுக்களோடு சேர்ந்து தவளைக்குஞ்சுகளான தலைப்பிரட்டைகளையும் அழித்தொழித்தன.
           விளைவு, கொசுக்கள் பெருகின; நம்மைத் தூங்கவிடாமல் காதோரம் வயலின் வாசித்து, ரத்தம் குடித்து, நோய்களைப் பரப்பின. இயற்கை மனிதனுக்கான கர்மாவை சற்றும் தாமதிக்காமல் கொடுத்தனுப்பியது. 



அறிவியல் எத்தனை வளர்ந்தபோதும் அறுத்துக்காட்டத் தேர்ந்தெடுக்கப்படும் தவளைகள்



(இயற்கையின் பார்வையில் சகலமும் சமமே)

           குரங்கு தானும் கெட்டு வனத்தையும் கெடுத்ததாக ஒரு பழமொழி கூறுவார்கள். ஆனால் உண்மையில், குரங்கிலிருந்து பரிணமித்ததாக நம்பப்படும் மனித இனம்தான், தானும் கெட்டு தான் சார்ந்த சூழலையும் கெடுக்கிறது. தனது சுயநலத்திற்காக தகவமைத்தல் என்கிற பெயரில் செய்யப்படும் சீரழிவுகளால், சுற்றுச்சூழலைச் சார்ந்து இயற்கையான முறையில் வாழும் பல்வேறு உயிரினங்கள் பேரழிவிற்கு ஆளாகின்றன. மேலும் இம்மனித இனமானது, தான் ஏதோ படைத்துக் கிழித்தாற்போல், வேட்டை என்கிற பெயரில் பல்வேறு உயிரினங்களை, அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இடம்பெறுமாறும், பல உயிரினங்களை அழித்தும் தனது பெருமைகளை வரலாற்றின் பக்கங்களில் அவ்விலங்கினங்களின் ரத்தத்தால் அலங்கரித்துள்ளது.


மனிதன் தனக்குப் புதுவித உணவைப் படைத்திருக்கிறான் என நம்பி நெகிழித்தாள்களை உண்ணும் ஆமை

           அதற்கு ஆகச்சிறந்த உதாரணம் 'பயணிப்புறா' (Passenger Pigeon). இவ்வினம் பொதுவாக வடகிழக்கு அமெரிக்காவின் இலையுதிர்க்காடுகளில் வாழ்ந்தன. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடிய இவை, உணவுக்காகவும், புலம்பெயரவும் பெருங்கூட்டமாகக் கிளம்பும் தன்மைகொண்டவை. பெருங்கூட்டம் என்றால் கரியமேகங்கள் சூரியனை மறைப்பதைப்போலக் கூட்டம். (அத்தனை கூட்டத்திலும் ஒன்றை ஒன்று மோதியதில்லை.) உதாரணத்திற்கு, 1866-ல் தெற்கு ஆன்டாரியோவில் 3.5 பில்லியனுக்கும் அதிகமான பயணிப்புறாக்கள் கூட்டமாகப் புலம்பெயர்ந்தன. அக்கூட்டம், 1.5 கி.மீ. அகலமும், 500 கி.மீ. நீளமும் கொண்டதாக இருந்தது. அவைகளின் இப்பயணம் ஏறத்தாழ 14 மணிநேரம் வானில் நீடித்தது. 300-லிருந்து 500 கோடியாக இருந்த இவ்வினத்தின் எண்ணிக்கை, தொல்குடி அமெரிக்கர்களாலும், ஐரோப்பியர்களின் ஊடுருவலாலும், விலை மலிவான இறைச்சி வேட்டை என்கிற பெயரில் தீவிரமாக நடந்தது. வேட்டை என்றால் துப்பாக்கிகளால் மட்டுமல்ல, இவை மிகவும் தாழ்வாகப் பறக்கும் சுபாவமுடையதால், கட்டைகளை அவற்றை நோக்கி வீசித்தாக்கி வீழ்த்தியும் கொல்லப்பட்டன. போதாக்குறைக்கு காடுகள் அழிப்பும் கைகோர்க்க, 1800 - 1870-ல் மெதுவாக அழியத்தொடங்கிய இவ்வினம், 1870 - 1890-ல் தீவிரமாகி, அவ்வினத்தின் கடைசி காட்டுப்பறவை 1901-ல் சுடப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில், தப்பிப்பிழைத்த சிலவற்றை மூன்று குழுக்களாகப் பிரித்துக் கூண்டுப்பறவைகளாக்கினர். அதிலிருந்த உலகின் கடைசி பயணிப்புறாவான "மார்த்தா" (Martha), சின்சினாட்டி மிருகக்காட்சிசாலையில், செப்டெம்பர் - 1, 1914-ல் இறந்தது. (பேட்மேன், சூப்பர்மேன் சாபம்லாம் உங்கள சும்மா விடாது டா...!)


பயணிப்புறா


புலம்பெயர்தல்


மார்த்தா உயிரோடு இருந்தபோது


மார்த்தா பாடம் செய்யப்பட்டு நமக்கு பாடாமானபோது

               இதன் கதையையாவது கொஞ்சம் ஜீரணிக்கலாம்; ஆனால், டோடோ பறவைகளின் முடிவு பரிதாபத்திற்குரியது. மொரிசியஸ், மடகாஸ்கர் போன்ற தீவுகளில் காணப்பட்ட இது, ருசியாக இருக்குமோ என வேட்டையாடப்பட்டது; சுவை படுகேவலம் என சுவைத்தவர் சொன்னதை சுற்றியிருந்த எவரும் கேட்கவில்லை. ஒவ்வொருவராய் வேட்டையாடி காலப்போக்கில் ஒன்றுகூட இல்லாமல் செய்துவிட்டனர். சுவைத்த அனைவரும் இறுதியில் சொன்னது இதுமட்டும்தான். "ஆமாடா, உண்மைலேயே நல்லா இல்ல...!" (பாட்டி சுட்ட ஒரு இட்லிகூட நல்லா இல்லைனு ஒரு அண்டா இட்லியையும் காலி பண்ணின கதை.)


டோடோ

             இதுபோல, சுயநலத்தாலும், சோம்பேறித்தனத்தினாலும், நம்பிக்கையின்மையாலும் நமைச்சூழ்ந்த இயற்கையின் கொடைகளை அழித்துவருகிறோம். கடைசியாய் நாம் பார்த்து ரசித்த் சிட்டுக்குருவி, நமது அறுக்க முடியாத ஆறாம் விராலான கைபேசியின் அலைக்கற்றையின் வலிமையினாலும், நெல் என்ற ஒன்றை மறந்து நேரடி அரிசியைக் கொள்முதல் செய்யும் சோம்பேறித்தனத்தினாலும், இதனாலெல்லாமா சிட்டுக்குருவி சாகும் என்கிற நம்பிக்கையின்மையாலும் சிட்டுக்குருவி மட்டுமல்லாது, பட்டாம்பூச்சி, மின்மினிப்பூச்சி போன்றவற்றை புத்தகங்களில் மட்டுமே நமது சந்ததியினருக்கு அடையாளம் காட்டும் அவல நிலைக்குக் கொண்டுவந்து விடாதீர்கள்.


சிட்டுக்குருவி


மின்மினிப்பூச்சி

           மனித மனம் எப்போதும் தான் நினைக்கும் கோணத்திலேயே, சக மனிதரிலிருந்து சக உயிரினம் வரை வகைபிரித்து அதையே உண்மை என போதிக்கவும் செய்கிறது. எல்லைதாண்டிய சிந்தனைகளுக்கு அவை துணிவதில்லை. ஆனால் உண்மையில் விலங்குகள் நாம் நினைப்பதை விட அதிபுத்திசாலிகள். உதாரணங்கள் சில,
  • குரங்குகள் குச்சிகள், கற்களைக் கருவிகளாக்கி உபயோகிக்கும் அறிவுடையவை
  • மனிதர்களைப் போல குரங்குகளும் பதவி ஆசை, வஞ்சனை போன்ற குணங்களைக் கொண்டுள்ளது. (மேலும் விபரமறிய, மதன் எழுதிய "மனிதனுக்குள் மிருகம்" புத்தகத்தை வாசியுங்கள்.)
  • ரக்கூன்கள் தான் சாப்பிடும் உணவை கழுவியபின்னரே உண்கின்றன. மேலும், பூட்டுகளைத் திறப்பது, புதிர்களை விடுவிப்பது போன்ற அசாத்திய செயல்களையும் செய்து அசத்தும்
  • இலைவெட்டி எறும்புகள் தாங்கள் உண்ணும் பூஞ்சையை, தாங்களே விவசாயம் செய்து உருவாக்குகின்றன
  • போயர் பறவைகள் தங்கள் கூடுகளை தங்களின் விருப்பமான வண்ணங்களுடைய பொருட்களைக் கொண்டு அலங்கரிக்கின்றன. (இவை ஏதேனும் ஒரு வண்ணத்தை மட்டுமே அலங்கரிக்கத் தேர்ந்தெடுக்கும்)
  • பெங்குவின்கள் எத்தனை பெரிய கூட்டத்திலும் தனது குடும்பத்தை சரியாகக் கண்டறிந்து, அத்தனை தூரம் தான் தனது அலகினுள் சேமித்துக் கொண்டுவந்த மீன்களை ஊட்டி விடுகிறது
  • கிளி மனிதர்களைபோல பேசுவதைப் போல, காகங்களும் பேசும்; கிளியினும் தெளிவாக!
  • பறவைகளிலேயே புத்திக்கூர்மையானது காகமே! இவைகளும் கருவிகளைப் பயன்படுத்தும் திறன் கொண்டது; இதிலும் கிளிகளைவிட ஒருபடி மேலாக!
  • மைனாக்களும், காகங்களும் பல்வேறு குரல்களில் ஒலி எழுப்பும்
  • நீரில் தவறி விழுந்து மூழ்குபவர்களை பாட்டில்மூக்கு டால்பின்கள் தங்கள் முதுகில் சுமந்து கரைசேர்க்கும். (இவ்வாறு பலரைக் காப்பாற்றிய ஒரு டால்பினை, இறைச்சிக்காக சுட முயன்ற நன்றிகெட்ட மனித இனத்திடமிருந்து தப்பிய அந்த டால்பின், அவமானத்தாலும் வெறுப்பாலும் இன்றுவரை நல்ல மனிதர்களின் கண்களுக்கும் தென்படவில்லை!)
  • யானைகளும் குரங்குகளும் தன்னினத்தில் இறந்தவைகளுக்காக மௌன அஞ்சலி செலுத்துபவை. (அசையாமல், சத்தம் எழுப்பாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பது!)


என்னே இயற்கையின் படைப்பு!


உறவுகளும் உணர்வுகளும் விலங்குகளுக்கும் உண்டு, மனிதன் எண்ணுவதை விட அதிகமாகவே



சொல்லொணாத் துயரம்



இலைவெட்டி எறும்புகள் (Leafcutter Ants)


ரக்கூன்


குரங்கினங்களிலேயே புத்திசாலியான கேப்புச்சின் குரங்குகள்


கருவிகளை எவ்வாறு உபயோகிப்பது எனக் கற்கவும் கற்பிக்கவும் செய்யும்


கருவியை உபயோகிக்கும் காகம்


கருவியை உபயோகிக்கும் கிளி


மைனா


தனது இணையோடு இணைய முதலில் வீடு கட்ட வேண்டும் இந்த போயர் பறவைகள் (Bower Bird)


தனக்குப் பிடித்த நிறமுடைய பொருட்களால் கூடானது அலங்கரிக்கப்பட்டு, அது பெண் பறவைக்குப் பிடித்திருந்தால் மட்டுமே முட்டை இடும் வாய்ப்புண்டு; இல்லையேல் முட்டை மதிப்பெண்தான்


அவைகள் ஒரே நிறங்களை சிறிதும் பிசிறின்றி தேர்வுசெய்யும் பாங்கைக் காணுங்கள்


'அஸ்பிலியா' என்கிற இத்தாவரத்தை குரங்குகள் விஷமுறிவுக்காக முகசுளிப்போடு தினமும் உண்கின்றன


பெங்குவின்



எத்தனை (மைல்) மயில் தூரம்!


இந்தோனேசியாவில் படம்வரைந்து தனது கையொப்பமிடும் "சுதா" எனும் யானை


பாட்டில் மூக்கு டால்பின்


விலங்குலக ராஜமாதா


           இத்தனை தூரம் எடுத்துக்கூறியும் சில ஜீவன்கள் எமக்காய் படைக்கப்பட்டதே இவ்வுலகிலுள்ள அனைத்தும் எனப் பிதற்றலாம். அந்நம்பிக்கையால் இயற்கை காக்கப்பட்டால் சந்தோஷமே. அழிக்கப்படுமாயின் அது தடுக்கவேண்டிய ஒன்று. கடவுளோ, கடவுளின் தூதரோ, கடவுளின் குழந்தையோ தண்ணீரில் நடந்தார்களோ தெரியாது; ஆனால், தண்ணீரில் நடக்கும்/ஓடும் கெக்கோ போன்ற அபூர்வம் நிறைந்த உயிரினங்கள் வாழும் இப்பூமியை அவை பிற உயிரினங்களை நேசிப்பதைப்போல நேசித்தலே போதும். 'ஆண்ட்ரோகிள்ஸ் அண்ட் த லயன்', விவிலியத்தில் தானியேல் போன்றோரை சிங்கங்கள் ஏதும் செய்யாததைப் படித்திருப்போம். அவற்றை மிஞ்சும் காணொளி, கீழே.


கெக்கோ


ஆண்ட்ரோகிள்ஸ் அண்ட் த லயன்


சிங்கங்களுடன் தானியேல்


காணவேண்டிய காணொளி

மேலும் சில ஆச்சர்யமான காணொளிகள்:

சிந்தித்து செயல்பட சில தகவல்கள்









நிஜ ராஜமாதா























என்ன இருந்தாலும் ஜீன்-ல இல்லாமலா போகும்?!





















மனிதருள் மாணிக்கம்

           சரி, மற்ற இனத்தை அழித்து, தான் வாழ வகை செய்யும் ஒட்டுண்ணி இனத்திலாவது இம்மனித உயிரினத்தை சேர்க்கலாமா என்று பார்த்தால் அதற்கும் வழியில்லை. காரணம், இவ்வுயிரினம் நாடு, இனம், மதம், நிறம், மொழி, சாதி, தொழில், அந்தஸ்து, சுயநலம், சுயலாபம் போன்ற பல்வேறு பைத்தியக்காரத்தனமான மாய எல்லைகளைத் தங்களுக்குள் வகுத்தும், பல்வேறு நிறச்சாயங்கள் பூசியும், முகமூடிகளை மாட்டிக்கொண்டும் விஞ்ஞானத்தின் பெயரால் அடித்துக்கொண்டு சாகின்றது; அது சார்ந்த இயற்கையையும் அழித்தவாறு.
  • போர்கள், போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் (இன, மத, மொழி, வள, நிற, தேச, கட்சி என சகலத்தின் அடிப்படையிலும்)
  • வறுமையை உருவாக்குவது, கண்டுகொள்ளாமல்/உதவாமல் இருப்பது
  • நிச்சயமான பாதுகாப்பற்ற மருத்துவ மற்றும் அறிவியல் பரிசோதனைகள்
  • முறையாகக் கழிவுகளை அகற்றாத தொழிற்சாலைகள்
  • மாசுபடுத்தும், ஆரோக்கியமற்ற முன்னேற்றங்களை மென்மேலும் வளர்ப்பது
என இவ்வினம் தனது இனத்தை சிறிது சிறிதாக அழிக்கக் கையிலெடுத்திருக்கும் ஆயுதங்கள் அபாரமானவை. வறுமையையும், வன்முறையையும் நினைத்த மாத்திரத்தில் இல்லாது செய்ய இயலாமல் இல்லை; அதனால் மனித இனத்தின் ஆளும் பதவியிலுள்ளோருக்கு எந்தவொரு லாபமும் இல்லாததால், இவை இன்னும் உயிர்ப்போடு உள்ளன. விளைவு, தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம், குடிக்கத் தண்ணீரின்றி மனிதர்கள் இறக்கும் முதல் நகரம் என்கிற அழியா இகழைப் பெறுகிறது. (கவனிக்க, இது முதல் நகரம்தான், ஒரே நகரம் அல்ல!)


போபால் விஷவாயுக் கசிவு


சிரியாவில் நடைபெற்ற தாக்குதலில் கருகிய பிஞ்சு நெஞ்சங்கள்


இறக்கும் முன் இச்சிறுவன் கூறிய வார்த்தைகள் "நான் இவங்க எல்லாரையும் கடவுள்-ட்ட சொல்றேன்"


தன்னை நோக்கித் துப்பாக்கியைத்தான் திருப்புகிறார்கள் என கேமராவைக் கண்டு அஞ்சி இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிய குழந்தை


இந்த வயதுக்குழந்தை என்ன பாவம் செய்தது, மனிதனாய்ப் பிறந்ததைத் தவிர



ஆற்றொணாத் துயரம்! என்ன சொல்லி சமாதானம் செய்வது எல்லோரையும் இழந்த இச்சிறுவனை


முதல் நாள் காலில் இதை அணியும்போது அக்குழந்தை இக்கோரத்தை நினைத்திருக்குமா?


தான் ஒன்றும் பெரிய கவசமில்லைதான்; இருந்தும், எதுவரினும் தன்னைத் தாண்டியே தன் தங்கையை நெருங்கவேண்டுமென்கிற துணிவும் அன்பும்


அழக்கூடக் கண்ணீரில்லை


எழக்கூட தெம்பில்லை




மனசாட்சி உறுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட மானஸ்தன் கெவின் கார்ட்டர்


வளமையும், வறுமையும்



பசிவந்தால் பத்தும் பறந்து போகும்


'என்னோடு இருப்பவன் மகிழ்ச்சியாக இல்லாதபோது என்னால் எப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடியும்' என்றுகூறி, "உபுண்டு" (Ubuntu) என்கிற வார்த்தையை உலகுக்கு அளித்த வேர்-இனத்தின் கிளையினம்



தாயுள்ளம் தாய்க்குத்தான்

           தனது குழந்தைப்பருவத்தில் அவ்வளவு உயரிய பண்புகளைக் கொண்டுள்ள இவ்வினம், வளர வளர அதுகொண்ட இறைத்தன்மையை இழந்து தீயவழிகளை (உணராமலும் கூட) தேர்ந்தெடுக்கிறது. எத்தனை பேர் மதம் என்கிற போர்வையில் நம்மைச்சுற்றியுள்ள சகலமும் நமக்காகப் படைக்கப்பட்டது என்று கூறினாலும், அவையும் நம்மைப்போல் படைக்கப்பட்டவையே / உருவானவையே எனவுணர்ந்து பெயருக்கேற்றாற்போல் மனிதர்களாக வாழத் தலைப்படுவோம். இப்பதிவு யாரேனும் ஒரு வாசகரின் மனதில் சிறிதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமானால், அத்தருணம் ஒரு பதிவராக நான் வென்றிருக்கிறேன் என்று பொருள்.



தலை வெட்டுண்டதை உணராது, மயக்கமெனக்கருதி ஆட்டிற்குத் தாகம் தீர்க்கும் குழந்தை


சிலையென்றறியாது குட்டி முயலை முயல் குடும்பத்தாரோடு சேர்த்துவிட ஒரு குழந்தை எடுக்கும் பிரயத்தனம்


அகமும், புறமும்
(Mind & Surrounding)



           இதன்பின்னரும், அதெல்லாம் முடியாது, நான் வாழ எதையும் அழிப்பேன் என்று, மனதளவில் மிருகமாத் திரியும் பெயரளவு மனிதர்களை, எதிர்காலத்தில் விலங்குகள் உட்பட சகல இயற்கைக் காரணிகளும் எதிர்க்கும் நிலைவந்தால், நிச்சயமாக என்போன்றோர் மனித இனத்தின் பிரதிநிதிகளாக வாதிடாது, இயற்கையின் புதல்வர்களாய் அம்மனித மிருகங்களை எதிர்க்கவும் தயங்கமாட்டோம் என்பதில், எவ்வித ஐயமுமில்லை.



இயற்கையின் புதல்வராய்





மனிதநேயமிக்க மிருகங்களுக்கு ஆதரவாய்




மனித மிருகங்களுக்கு எதிராய்





வாழ்வோம், வாழவிடுவோம்...!!!
ஜெய் ஹிந்த்...!!!


இன்னும் செ(ா)ல்வேன்,
- யாத்ரீகன்




மேலும் விவரங்களுக்குக் காண்க:

Tiger kills boy in Delhi zoo